Thursday, February 19, 2026

இணைய உலகின் புரட்சியாளன்: Mozilla Firefox உருவான கதை

 இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (IE) என்ற அரக்கனை எதிர்த்துப் போரிட்ட ஒரு "நெருப்பு நரி" தான் பயர்பாக்ஸ் (Firefox). உண்மையில்  "பயர்பாக்ஸ் லோகோவில் இருப்பது நரி அல்ல, அது ஒரு சிவப்பு பாண்டா!"

நெட்ஸ்கேப் (Netscape) - ஆரம்பப்புள்ளி

90-களின் இறுதியில் நெட்ஸ்கேப் என்ற பிரவுசர் தான் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால், மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் ஓஎஸ்-உடன் 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' பிரவுசரை இலவசமாக இணைத்து அனுப்பியதால், நெட்ஸ்கேப் சந்தையில் வீழ்ந்தது.

தோற்றுப்போன அந்த நிறுவனம், ஒரு அதிரடி முடிவை எடுத்தது. நான் வீழ்ந்தாலும் உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறுவேன் என்று தனது பிரவுசரின் குறியீடுகளை (Source Code) உலகிற்குப் பொதுவாக்கியது (Open Source). இதை நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் உருவானதுதான் Mozilla Project. இந்த அமைப்பின் நோக்கம் இணையத்தின் அதிகாரம் ஒரு சில பெரிய நிறுவனங்களின் கையில் மட்டுமே இருக்கக்கூடாது.


 'பீனிக்ஸ்' (Phoenix)

Mozilla அமைப்பில் இருந்த டேவ் ஹையாட் (Dave Hyatt) மற்றும் பிளேக் ரோஸ் (Blake Ross) என்ற இரு இளைஞர்கள் ஒரு புதிய புராஜெக்ட்டைத் தொடங்கினார்கள். அப்போது இருந்த பிரவுசர்கள் மிகவும் மெதுவாகவும், தேவையில்லாத அம்சங்கள் நிறைந்தும் இருந்தன. அதை மாற்றி மக்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும் தனியுரிமை பாதுகாப்பு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு ப்ரவுசரை உருவாக்க முயன்றார்கள்.

 அதற்கு 'Phoenix' (பீனிக்ஸ்) என்று பெயரிட்டனர். சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பறவையைப் போல, நெட்ஸ்கேப்பின் அழிவிலிருந்து இது உருவானதால் அந்தப் பெயர்.

'பீனிக்ஸ்' என்ற பெயர் ஏற்கனவே ஒரு நிறுவனத்திடம் இருந்ததால், அவர்கள் பெயரை 'Firebird' (பயர்பேர்ட்) என்று மாற்றினார்கள். இதிலும் காப்புரிமை சிக்கல் வரவே, இறுதியில் 'Firefox' என்ற பெயர் 2004-ல் சூட்டப்பட்டது.

ஒரு நாளில் ஒரு மில்லியன் டவுன்லோட்!

நவம்பர் 9, 2004 அன்று பயர்பாக்ஸ் 1.0 வெளியானது. Explorer என்ற அடிதைத்தனத்தில் இருந்து நம்மை காப்பாற்ற ஒரு மேசியா வர மாட்டாரா என்ற மக்கள் ஏங்கி நின்ற காலம் அது ஏனெனில் அப்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் நிறைய வைரஸ் மற்றும் பாப்-அப் விளம்பரத் தொல்லைகள் இருந்தன இதனால் மக்கள் அதிருப்தியில் இருந்தார்கள் போதாத குறைக்கு ஹேக்கர்களின் முதல் இலக்காக எக்ஸ்புளோரர் இருந்தது. இதில் வைரஸ் மற்றும் மால்வேர்கள் (Malware) எளிதாக ஊடுருவ முடிந்தது இதனால் பயர்பாக்ஸ் வந்த வேகத்தில் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.

பயர்பாக்சில் இருந்த முக்கிய அம்சங்கள்

Tabs (டேப்கள்): ஒரே விண்டோவில் பல பக்கங்களைத் திறக்கும் வசதியை பிரபலப்படுத்தியது.

Extensions: உங்களுக்குத் தேவையான வசதிகளை நீங்களே சேர்த்துக் கொள்ளும் முறை.

வேகம்: எக்ஸ்ப்ளோரரை விட பல மடங்கு வேகம்.

வெளியான முதல் 99 நாட்களிலேயே 2.5 கோடி பேர் இதைப் பதிவிறக்கம் செய்தனர். இது அப்போது ஒரு மிகப்பெரிய உலக சாதனை!

2008-ல் கூகுள் குரோம் வந்த பிறகு, பயர்பாக்ஸின் மகுடம் மெல்லச் சரியத் தொடங்கியது. ஏனெனில், கூகுள் தனது தேடுபொறி வலிமையைப் பயன்படுத்தி குரோமை வளர்த்தது. ஆனாலும், இன்றுவரை பயர்பாக்ஸ் தனித்துவமாக இருப்பதற்குக் காரணம்:

  • இது ஒரு லாப நோக்கற்ற (Non-profit) அமைப்பு.
  • உங்கள் தரவுகளை (Data) விற்காது.
  • Privacy (தனியுரிமை) விஷயத்தில் இன்றும் இதுதான் அரசன்.

No comments: