Thursday, February 19, 2026

"ஒரு சிறு பொறியும்... உலகை ஆளும் பென்குயினும்!"

 

ஒரு மாணவர் தனது அறையில் பொழுதுபோக்காக ஆரம்பித்த விஷயம், இன்று உலகத் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக நிற்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? ஆம்! அது தான் உண்மை.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) என்ற 21 வயது மாணவர், தனது கணினியில் பயன்படுத்துவதற்காக ஒரு புதிய இயக்குதளத்தை (Operating System) உருவாக்க முயன்றார். அப்போது அவர் 'மினிக்ஸ்' (Minix) என்ற சிஸ்டத்தை பயன்படுத்தி கொண்டிருந்தார். மினிக்ஸ் (Minix) என்பது யூனிக்ஸ் (Unix) போன்ற ஒரு இயக்குதளமாகும். இது 1987 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆண்ட்ரூ எஸ். டானென்பாம் (Andrew S. Tanenbaum) என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வணிக ரீதியானது அல்ல; பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு இயக்குதளம் (Operating System) எப்படி வேலை செய்கிறது என்பதைச் சொல்லிக் கொடுப்பதற்காகவே இது உருவாக்கப்பட்டது. மினிக்ஸில் இருந்து சில குறைகளை லினஸ் சரி செய்து அதை மேம்படுத்த நினைத்தார். அந்த முயற்சியில் உருவானது தான் லினக்ஸ்.


லினஸ் தான் உருவாக்கிய கெர்னலுக்கு (Kernel) "Freax" (Free + Freak + x) என்றுதான் பெயர் வைக்க விரும்பினார். ஆனால், அந்த கோப்புகளைப் பதிவேற்றிய சர்வர் நிர்வாகிக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை. அவர் லினஸின் பெயரையும் 'Unix'-ஐயும் இணைத்து "Linux" என்று பெயரிட்டார். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

ஆகஸ்ட் 25, 1991 அன்று, அவர் இணையத்தில் ஒரு செய்தியைப் பதிவிட்டார்:

"நான் ஒரு இலவச இயக்குதளத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்... இது ஒரு பொழுதுபோக்கு (hobby) முயற்சிதான், இது Professional-ஆகவோ அல்லது பெரிய அளவிலோ இருக்காது..."

பொழுது போக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த விஷயம் நாளை உலகத்தின் எதிர்காலம் என்று அப்போது அவருக்கு தெரியாது.

இன்று லினக்ஸ் எங்கே இருக்கிறது?

"பெரிய அளவில் இருக்காது" என்று லினஸ் அன்று சொன்ன லினக்ஸ் இன்று எங்கெல்லாம் இருக்கிறது தெரியுமா?

  • உங்கள் கையில்: உலகின் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் (Android) லினக்ஸ் மூலமே இயங்குகின்றன.
  • விண்வெளியில்: நாசாவின் விண்கலங்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர் கூட லினக்ஸ் மூலம்தான் இயங்கியது.
  • இணையத்தில்: உலகின் டாப் 500 சூப்பர் கம்ப்யூட்டர்களும், நாம் பயன்படுத்தும் கூகுள், பேஸ்புக் போன்ற தளங்களின் சர்வர்களும் லினக்ஸ்-ல் தான் இயங்குகின்றன.

No comments: