Thursday, February 19, 2026

Know-it-all to Learn-it-all

 

"மைக்ரோசாஃப்ட் என்பது எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் நிறுவனம் (Know-it-all) அல்ல; அது எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் நிறுவனமாக (Learn-it-all) மாற வேண்டும்"

2014-ல் சத்யா நாதெல்லா சிஇஓ-வாகப் பொறுப்பேற்றதும் அவர் பேசிய வார்த்தைகள் தான் இவை.

“யானைக்கும் அடி சறுக்கும்” என்ற பழமொழி உண்டு அதே போன்ற நிலைமை தான் அன்றைக்கு மைக்ரோசாப்ட்டுக்கு ஏற்ப்பட்டு இருந்தது. சத்யா நாதெல்லா பதவியேற்க்கும் நேரம் மைக்ரோசாஃப்ட் கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருந்தது எனலாம். விண்டோஸ் 8-ல் படுதோல்வி அதே நேரத்தில் நோக்கியா நிறுவனத்தையும் வாங்கி பெருத்த நஷ்டத்தை சந்தித்து இருந்தது. இந்த நேரத்தில் தான் சத்யா பதவியேற்கிறார்.


சத்யா நாதெல்லா ஒரு யதார்த்தவாதி. உலகம் 'கிளவுட்' (Cloud) மற்றும் 'ஓப்பன் சோர்ஸ்' (Open Source) நோக்கி நகர்வதை அவர் உணர்ந்தார்.

"தனித்து நின்று போரிடுவதை விட, இணைந்து வளர்வதே சிறந்தது" என்ற தத்துவத்தை அவர் கையாண்டார். விண்டோஸ் என்ற ஒரு தயாரிப்பை மட்டும் நம்பியிருக்காமல், அனைத்துத் தளங்களிலும் மைக்ரோசாப்ட் இருக்க வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது.

2014-ல் சத்யா நாதெல்லா பொறுப்பேற்ற பிறகு, ஒரு மேடையில் அவர் உரையாற்றினார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்த பிரம்மாண்டத் திரையில் ஒரு வாசகம் பளிச்சிட்டது:

அதைக்கண்ட ஒரு கணம் அந்த அரங்கமே ஸ்தம்பித்தது. சற்று நேரத்தில் விஷயம் காட்டுத்தீயாக பரவி உலகமே வியந்தது.

அப்படி அந்த திரையில் என்னத்தான் தோன்றியது ? 

"Microsoft Loves Linux"

 உலகமே எதிர்பாராத ஒரு முடிவை “சத்யா நாதெல்லா” எடுத்தார். அதுவரை மைக்ரோசாப்டின் பரம எதிரியா பார்க்கப்பட்ட லினக்ஸ்சை அரவணைத்துக் கொண்டார்.

தளம் அல்ல சேவையே முக்கியம் :

லினக்ஸ் அறக்கட்டளையில் (Linux Foundation) மைக்ரோசாப்ட் ஒரு 'பிளாட்டினம் உறுப்பினராக' சேர்ந்தது.

 "Microsoft Loves Linux"என்ற அறிவிப்பை வெளியிட்டதோடு நிற்காமல் செயலில் இறங்கியது தனது சொந்த 'அசூர்' (Azure) கிளவுட் தளத்தில் லினக்ஸை அனுமதித்தது. விண்டோஸ் கணினியின் உள்ளேயே லினக்ஸ் இயங்குதளத்தை நேரடியாகப் பயன்படுத்தும் வசதியைக் கொண்டு வந்தது. இது டெவலப்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அடுத்து தடாலடியாக ஆப்பிளின் ஐபோன்களில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருளைக் கொண்டு வந்தது.

"எங்களுக்குத் தளம் (Platform) முக்கியமல்ல, வாடிக்கையாளர் எங்கே இருக்கிறாரோ அங்கே எங்கள் சேவை இருக்க வேண்டும்" என்றார் சத்யா. இந்த அணுகுமுறை மைக்ரோசாஃப்ட்டை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அதோடு நிற்காமல் அவர் எதிர்காலத்தை கணித்தார் சரியான நேரத்தில் OpenAI மீது முதலீடு செய்தார் அன்று அவர் எடுத்த அந்த புத்திசாலித்தனமான முடிவின் காரணமாகத் தான் மைக்ரோசாப்ட் தேடுபொறியான 'Bing' முதல் விண்டோஸ் வரை அனைத்திலும் AI-யை (Copilot) இணைத்து, கூகுளுக்கே சவால் விடும் நிலைக்கு இன்று உயர்ந்து நிற்கிறது.

2026-ல், மைக்ரோசாப்ட் உலகின் மிகப்பெரிய ஓப்பன் சோர்ஸ் பங்களிப்பாளர்களில் ஒன்றாக உள்ளது. GitHub போன்ற தளங்களை வாங்கி, ஒட்டுமொத்த மென்பொருள் உலகத்தையும் வழிநடத்தி வருகிறது.

No comments: