Thursday, February 19, 2026

"Selling something that doesn't exist" - Story of Billionaire

இல்லாத ஒன்றை விற்க முடியுமா ?

முடியும் ! முடிவது மட்டுமல்ல அதை விற்று உலகப்பணக்காரராகவும் மாற முடியும் எப்படி ? என்ன கொஞ்சம் ரிஸ்க் எடுக்கனும் மற்றவங்க மாதரி இல்லாம மாற்றி யோசிக்கணும்.

1980-களில் ஐபிஎம் நிறுவனம் தனது புதிய தனிநபர் கணினிகளுக்காக (PC) ஒரு இயங்குதளத்தை (Operating System) தேடிக்கொண்டிருந்தது. அப்போது மைக்ரோசாப்ட் ஒரு சிறிய நிறுவனமாக இருந்தது. ஐபிஎம் அதிகாரிகள் பில் கேட்ஸை அணுகி, "உங்களிடம் எங்களுக்கான ஒரு ஓஎஸ் இருக்கிறதா?" என்று கேட்டனர்.

உண்மையில் அந்த நேரத்தில் பில் கேட்ஸிடம் எந்த ஓஎஸ்-உம் கிடையாது. ஆனால் கிடைத்த வாய்ப்பை  அவர் விடுவதாக இல்லை, "ஆமாம், எங்களிடம் இருக்கிறது" என்று கூறி ஐபிஎம் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.


இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஒப்பந்தம் செய்து கொண்டார் அடுத்து என்ன செய்வது. உடனடியாக டிம் பேட்டர்சன் (Tim Paterson) என்ற ஒரு புரோகிராமர் உருவாக்கிய QDoS (Quick and Dirty Operating System) என்ற மென்பொருளை வெறும் $50,000 கொடுத்து வாங்கினார் அதில் சிறிது மாறுதல்களை செய்து அதற்கு MS-DOS என்று பெயர் மாற்றினார்.

வரலாற்றை மாற்றிய அந்த ஒரு முடிவு

ஐபிஎம் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க முன்வந்தது. ஆனால் பில் கேட்ஸ் ஒரு புத்திசாலித்தனமான ஒரு முடிவை எடுத்தார்

"நான் இந்த மென்பொருளை உங்களுக்கு விற்கமாட்டேன், ஆனால் நீங்கள் பயன்படுத்த அனுமதி (Licensing) தருகிறேன். இந்த மென்பொருளை மற்ற நிறுவனங்களுக்கும் விற்கும் உரிமை மைக்ரோசாப்ட் வசமே இருக்கும்."

ஐபிஎம் அதிகாரிகள் சிரித்தனர். "யாருப்பா அந்த மென்பொருளை மட்டும் தனியா வாங்கப்போறாங்க? கம்ப்யூட்டர் வித்தாதானே லாபம்" என்று நினைத்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பில்கேட்சின் கணிப்பு பொய்க்கவில்லை அடுத்த சில ஆண்டுகளில், ஐபிஎம் கணினிகள் போலவே பல நிறுவனங்கள் (Dell, HP, Compaq) கணினிகளைத் தயாரிக்கத் தொடங்கின. அந்த நிறுவனங்கள் அனைத்தும் மைக்ரோசாப்டிடம் வந்து MS-DOS உரிமத்தை வாங்க வேண்டியிருந்தது.

கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனங்கள் எல்லாம் போட்டியில் அடித்துக்கொண்டபோது, மென்பொருளை மட்டும் வைத்திருந்த மைக்ரோசாப்ட் உலகப் பணக்கார நிறுவனமாக மாறியது.

No comments: